×

வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி

புதுடெல்லி: மருத்துவ நீட் நுழைவுத்தேர்வில் வழக்கம் போல் வடமாநிலங்களில் பல்வேறு மோசடிகள் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என பல்வேறு குளறுபடிகளுக்கு காரணமான 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் என சுமார் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் 1.55 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். வழக்கம் போல், தேர்வறைக்கு அனுமதிக்கும் முன்பாக மாணவ, மாணவிகளிடம் கெடுபிடியான சோதனைகள் செய்யப்பட்டன. ஆனாலும், அவற்றை எல்லாம் மீறி வடமாநிலங்களில் எப்போதும் போல நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் இந்த முறையும் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. குறிப்பாக தேர்வு நடந்து கொண்டிருக்கும் போதே சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் வினாத்தாள் குறித்த புகைப்படங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. ராஜஸ்தானில் சவாய் மதோபூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றில், இந்தி வழி தேர்வு எழுத வந்திருந்த 120 மாணவர்களுக்கு ஆங்கில வழி வினாத்தாள் தரப்பட்டது.

இதை கண்டித்து அந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வினாத்தாள் புகைப்படங்கள் வெளியாகின. இதுமட்டுமின்றி, ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் மருத்துவ கல்லூரி மாணவர்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. பீகாரின் பாட்னாவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் பிரபல மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் சோனு சிங் எனும் மாணவர், அபிஷேக் ராஜ் என்பவருக்கு பதிலாக தேர்வறையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளார்.

ஆள் மாறாட்டம் செய்த அந்த மாணவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, மோசடி கும்பல் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆள்மாறாட்டம் செய்ய ஒரு மாணவருக்கு ரூ.5 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு பல தேர்வர்களுக்கு பதிலாக வேறொருவர் தேர்வு எழுதி உள்ளார். இதுதொடர்பான தகவல்களை பிடிபட்ட சோனு சிங் மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பாட்னாவில் சில லாட்ஜ்களில் மாணவர்கள் தங்கவைக்கப்பட்டு தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் குறித்து அவர்களை படிக்க வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதற்காக ஒரு மாணவருக்கு தலா ரூ.20 லட்சம் வரை பேரம் பேசி வாங்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தேர்வுக்கு முந்தைய நாளே பாட்னா போலீசார் பல்வேறு லாட்ஜ்களில் சோதனை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரிக்கின்றனர். இந்த விவகாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேர்வுக்கு முன்பாக பயோமெட்ரிக் சோதனையின் போது, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த 7 பேர் பிடிபட்டனர். ராஜஸ்தானின் ரூ.10 லட்சம் பெற்று ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத முயன்றதாக பாரத்பூரில் 2 எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 50 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர் சாதனா பராஷர் கூறி உள்ளார். நீட் தேர்வில் நடந்திருக்கும் இத்தகைய மோசடிகள், தேர்வு எழுதிய மாணவர்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

* 24 லட்சம் மாணவர்களுக்கு பாஜ அரசு துரோகம் ராகுல் கடும் கண்டனம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் ‘‘நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது 24 லட்சம் மாணவர்களுக்கு செய்யப்பட்ட துரோகம். வேலை தேடும் இளைஞர்களுக்கும், கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கும் மோடி அரசு ஒரு சாபமாகி விட்டது. கடந்த 10 ஆண்டு காலத்தில் பாஜ அரசின் திறமையின்மையால் தங்களின் எதிர்காலம் பாழாகிவிட்டதை இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், கடுமையான சட்டங்கள் இயற்றுவதன் மூலம், வினாத்தாள் கசிவில் இருந்து இளைஞர்களை காக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது’’ என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘மீண்டும் ஒருமுறை நீட் தேர்வுத் வினாத்தாள் கசிவு என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 24 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டாக கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நடந்து வரும் இந்த துரோகம் நின்றபாடில்லை. இதைப் பற்றி பிரதமர் மோடி பதில் சொல்வாரா? வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டம் எங்கே? ஏன் செயல்படுத்தவில்லை?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

* தேர்வு முகமை விளக்கம்
தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) மூத்த இயக்குநர் சாதனா பராஷர் நேற்று அளித்த விளக்கத்தில், ‘‘நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றவை. அவை வெறும் வதந்தியே. என்டிஏ நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து வருகிறது. தேர்வு தொடங்கிய பிறகு வெளிநபர்கள் யாரும் தேர்வு மையத்திற்குள் செல்ல முடியாது. தேர்வின் ஒவ்வொரு வினாத்தாளுக்கும் கணக்கு உண்டு. எனவே சமூக ஊடகங்களில் பரவிய வினாத்தாளிற்கும், உண்மையான வினாத்தாளிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ராஜஸ்தானில் தவறான வினாத்தாள் தரப்பட்டதால் சில தேர்வர்கள் வெளியேறினர். பாதிக்கப்பட்ட 120 தேர்வர்களுக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. சில இடங்களில் முறைகேடுகள், ஆள்மாறாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட தேர்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி appeared first on Dinakaran.

Tags : northern states ,New Delhi ,NEET ,
× RELATED பரமத்திவேலூரில் போலீஸ் அதிரடி...